உலக நாடுகள் மீது டிரம்ப் சட்டவிரோதமாக வரி அறவீடு செய்துள்ளார் – உச்ச நீதிமன்றம்
உலக நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சட்டவிரோதமான முறையில் வரி அறவீடு செய்துள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
டிரம்பின் சுங்க வரிகள் (tariffs) கூட்டாட்சி சட்டத்தை மீறுவதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
6–3 என்ற பெரும்பான்மை தீர்ப்பில், 1977ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் டிரம்ப் விதித்த பெரும்பாலான அவசர சுங்க வரிகளுக்கு சட்டபூர்வ ஆதாரம் இல்லை என நீதிமன்றம் தெரிவித்தது.

அளவில்லாத, காலவரையற்ற, பரந்த அளவிலான சுங்க வரிகளை ஒருதலைப்பட்சமாக விதிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது எனவும் அதற்கு காங்கிரஸின் தெளிவான அனுமதி அவசியம் எனவும் பிரதம நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் அவசரநிலைகளில் சர்வதேச வர்த்தகத்தை ‘ஒழுங்குபடுத்த’ ஜனாதிபதிக்குஅதிகாரம் வழங்கினாலும், ‘வரி விதிப்பு’ குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
சுங்க வரிகள் விதிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் படி காங்கிரஸுக்கே உரியது என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
ஏற்கனவே வசூலிக்கப்பட்டுள்ள சுமார் 134 பில்லியன் அமெரிக்க டொலர் சுங்க வரியை திருப்பி வழங்க வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றம் தெளிவான உத்தரவை வழங்கவில்லை.
அந்த விவகாரம் கீழ்நீதிமன்றங்களில் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.