கிரிப்டோகரன்சி பிரபலம் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது!
கனடாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கிரிப்டோகரன்சி சமூக வலைத்தளப் பிரபலமான கெவின் மிர்ஷாஹி கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், முக்கிய சந்தேக நபர் ஒருவர் மெக்சிகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கியூபெக் மாகாணத்தின் செயின்ட்-லாசரே பகுதியைச் சேர்ந்த 38 வயதான கில்லூம் நோபர்ட் என்பவரே மெக்சிகோவின் கான்கன் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கியூபெக் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோ பொலிஸார், கனடிய பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போல் ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையால் இக்கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் குற்றவியல் விசாரணைகளுக்காக விரைவில் கியூபெக் மாகாணத்திற்கு நாடுகடத்தப்படவுள்ளார். கெவின் மிர்ஷாஹியைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டுக்கு மேலதிகமாக, ஏனைய மூவரைக் கடத்தி சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதி, பழைய மொன்ட்ரியல் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து 24 வயதான கெவின் மிர்ஷாஹி உட்பட நால்வர் கடத்தப்பட்டனர். அவர்களில் மூவர் மறுநாள் மீட்கப்பட்ட போதிலும், மிர்ஷாஹி காணாமல் போயிருந்தார்.
பின்னர் 2024 ஒக்டோபர் 30 ஆம் திகதி, மொன்ட்ரியலின் அஹன்ட்சிக்-கார்டியர்வில் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. அவர் கடத்தப்பட்ட அன்றே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் முன்னதாக 2024 ஓகஸ்ட் மாதம் ஜோனி லெபேஜ் என்பவர் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து 2024 நவம்பர் மாதம், கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் டேரியஸ் பெர்ரி மற்றும் நக்கேல் ஹிக்கி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கொலை செய்யப்பட்ட கெவின் மிர்ஷாஹி, 'கிரிப்டோ பாரடைஸ் ஐலண்ட்' என்ற பெயரில் கட்டணம் செலுத்தி இணையும் இரகசிய டெலிகிராம் குழுமம் ஒன்றை நடத்தி வந்தவர் என்பதும், 2021 ஆம் ஆண்டில் அவர் முதலீட்டு ஆலோசகராகச் செயல்படுவதற்கும் பங்குச் சந்தை பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதற்கும் நிதிச் சந்தை அதிகாரசபையால் தடை விதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.