கனடாவில் யூத ஆலய துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி பலி
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், பெல்லெவில் பகுதியில் உள்ள 'சன்ஸ் ஆஃப் ஜேக்கப்' யூத ஜெப ஆலயத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் கனடா ராணுவ வீரர் ஷான் வார்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, யூதர்களின் புனித நாளான 'யோம் கிப்பூர்' வழிபாட்டிற்காக மக்கள் ஜெப ஆலயத்தினுள் தயாராகிக் கொண்டிருந்தனர்.
அப்போது, குயின்டே வெஸ்ட் பகுதியைச் சேர்ந்த ஷான் வார்டு, ஒரு டிரக் வாகனத்தில் வந்து, ஜெப ஆலயத்திற்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது ஷாட்கன் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

காவல்துறையினர் நடத்திய எதிர்த்தாக்குதலில் ஷான் வார்டு பலத்த காயமடைந்தார். சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்த அவர், மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவர் திங்கள்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சிறப்பு புலனாய்வுப் பிரிவு உறுதி செய்துள்ளது. அவருக்கு புதன்கிழமை கிங்ஸ்டனில் உடற்கூறாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பெல்லெவில் காவல் துறையில் 13 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த காவலர் ஜெஃப் ஸ்மித் படுகாயமடைந்தார்.
கழுத்து உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது நிலைமை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்கான பின்னணி குறித்து காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.