சுவீடன் பாடசாலையில் பரபரப்பு சம்பவம்; ஒருவர் பலி மூவர் படுகாயம்!
மத்திய சுவீடனில் உள்ள பாடசாலை ஒன்றில் வாளுடன் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய வாள்வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஃபேகர்ஸ்டா (Fagersta) நகரில் உள்ள பிரினெல் (Brinell High School) மேல்நிலைப் பாடசாலையில் வெள்ளிக்கிழமை (21) மதியம் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய சந்தேக நபரைக் அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒருவர் பலி மூவர் படுகாயம்
கோடைக்கால விடுமுறைக்குப் பிறகு பாடசாலை மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. 16 முதல் 20 வயதுடைய சுமார் 450 மாணவர்கள் பயிலும் அந்தப் படசாலைக்குள் புகுந்த 18 வயது இளைஞரை அந்நாட்டு பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுக் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இந்தத் தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 12 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்திய நபர் அப்பாடசாலையின் முன்னாள் மாணவர் என்றும், ஹெல்மெட் அணிந்து வாளுடன் பாடசாலைக்குள் நுழைந்த அவர் மீது ஏற்கனவே தாக்குதல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலுக்கான துல்லியமான காரணம் என்னவென்று அந்நாட்டு பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.