இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் அதிரும் சிரியா
சிரியாவின் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகம், ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு நிலையம், இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் என்பவற்றை குறிவைத்து (16) அதிகாலை இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதலை தொடங்கியது.
இந்த தாக்குதல், அண்மைய ஆண்டுகளில் சிரிய தலைநகர் டமாஸ்கஸின் மையப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய நேரடித் தாக்குதல்களில் ஒன்றாகும்.
இந்த தாக்குதல்களின் விளைவாக மூன்று பேர் உயிரிழந்ததாகவும், 34 பேர் காயமடைந்ததாகவும் சிரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியப் படைகள் மற்றும் சிரிய ஊடகங்கள் இரண்டும் வெளியிட்ட வீடியோ காட்சிகள், மத்திய டமாஸ்கஸில் உள்ள கட்டிடத்தின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட தருணத்தைக் காட்டுகின்றன.
ட்ரூஸ் போராளிகள் மற்றும் பிரிவினைவாத குழுக்களுக்கு இடையே பல நாட்களாக கொடிய மோதல்களால் பாதிக்கப்பட்ட தெற்கு சிரிய பிராந்தியமான சுவைடாவிற்கு அரசாங்கப் படைகளை அனுப்புவதற்கான கட்டளை மையமாக டமாஸ்கஸ் தலைமையகம் செயல்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்துள்ளது.
சிரியாவின் தெற்கில் உள்ள சுவைடா பகுதியில், நாட்டின் சிறுபான்மையினரான ட்ரூஸ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.