சர்வாதிகார ஆட்சியின் முடிவை பாரிய பேரணிகளாக கொண்டாடும் சிரியா மக்கள்
சிரியாவில் 5 தசாப்தகாலமாக நிலவிய அசாட்டின் சர்வாதிகார ஆட்சியின் முடிவைக் கொண்டாடும் வகையில் நாடளாவிய ரீதியாக பாரிய பேரணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முஸ்லீம் ஆயுததாரிகள் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து, தலைநகர் டமஸ்கஸ் மற்றும் பிற நகரங்களில் பொதுமக்கள் வீதியில் இறங்கி இந்த பேரணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுததாரிகள் டமஸ்கசை கைப்பற்றியதை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி பஷிர் அல்-அசத் ரஷ்யாவிற்குத் தப்பி சென்ற நிலையில், அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அகமத் அல்-ஷாரா மக்களை சித்திரவதைக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது தவிர, அசாத்தின் நிர்வாக காலப்பகுதியில், சித்திரவதை கூடமாக உபயோகிக்கப்பட்ட சிறைச்சாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் சிரியாவில் ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்தும் நோக்கில் இராஜதந்திர நகர்வுகள் இடம்பெறுகின்றன.
இது தவிர, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன், சிரியா தொடர்பாகப் பேச்சுவார்த்தையினை மேற்கொள்ளும் நோக்கில், திட்டமிடாத விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.