T20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் - மீண்டுமொரு களத்தில் அவுஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா
அவுஸ்திரேலியா அணிகளுக்டையிலான 5 ஆட்டங்கள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று (2023.11.23) இரவு 7.00 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
ICC ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று Pat Cummins தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய அணி அடுத்த தலைமுறை
இந்த T 20 தொடரில் இந்திய அணி அடுத்த தலைமுறை வீரர்களுடன் சூர்யகுமார் தலைமையில் களமிறங்குகிறது. அவர், உட்பட உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்ற இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மட்டுமே T20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.
உலகக் கோப்பை தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறிய சூர்யகுமார் யாதவ் T20 தொடரில் தனது அணியை வழிநடத்தவுள்ளார்.
அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ICC T20 தொடர் நடைபெற உள்ளது.இதனால் தற்போது நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான T20 தொடர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்களின் திறன்களை பரிசோதிப்பதாக இருக்கக்கூடும்.
பேட்டிங்கில் அதிரடியாக விளையாடக்கூடிய ருதுராஜ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்குசிங், திலக்வர்மா, ஜிதேஷ் சர்மா ஆகியோருடன் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக களமிறங்கி உள்ளனர்.
இளம் வீரர்களின் முக்கியத்துவம்
அவுஸ்திரேலிய அணியானது மேத்யூ வேட் தலைமையில் களமிறங்குகிறது. உலகக் கோப்பை தொடரை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஸம்பா, மார்கஸ்ஸ்டோனிஸ் ஆகியோர் T20 தொடரிலும் இடம் பெற்றுள்ளனர்.
டேவிட்வார்னருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஆரோன் ஹார்டி சேர்க்கப்பட்டுள்ளார். பந்து வீச்சில் பிரதான வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. எனினும் கேன் ரிச்சர்ட்சன், நேதன் எல்லிஸ், சீன் அபோட், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ஆகியோரை உள்ளடக்கிய வேகப்பந்து வீச்சு துறை இந்திய துடுப்பாட்ட வரிசைக்கு சவால்கொடுக்க ஆயத்தமாக உள்ளது.
அடுத்த ஆண்டு IPL தொடருக்கு முன்னதாக இந்திய அணி 11 சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால் T20 கோப்பையை கருத்தில் கொண்டு அடுத்த இரு மாதங்களும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்த காலக்கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக இந்திய அணி, T20 தொடர்களில் விளையாட திட்டமிட்டுள்ளது.