தைவானை கைப்பற்றுவோம்: சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சூளுரை
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ஜி ஜின்பிங், தைவானை தங்களுடன் இணைத்துக்கொள்ள தேவைப்பட்டால் பலத்தைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என சூளுரைத்துள்ளார்.
ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு பீஜிங் கிரேட் ஹாலில் முன்னெடுக்கப்பட்டது. 2300 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜி ஜின்பிங்,
ஹொங்ஹொங்கில் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. குழப்பம் சூழ்ந்து காணப்பட்ட ஹொங்ஹொங் தற்போது பெரும் மாறுதலை சந்தித்துள்ளது. தற்போது அது சீன அரசின் ஒரு பகுதியாக உள்ளது.
அதேபோல், தைவான் பிரச்சினையில் பிரிவினைவாதிகளை முறியடித்து நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை வீழ்த்துவதில் சீனா உறுதியாக இருக்கிறது. தைவான் பிரச்சினையில் சீன மக்கள் தான் தீர்வு காண வேண்டும். சீன அரசு ஒருபோதும் பலத்தைப் பிரயோகப்படுத்த தயங்காது.
தைவானை சீனாவுடன் ஒருங்கிணைப்பதில் நாங்கள் அமைதியான வழியில் செல்வோம். அதீத முயற்சிகளுடன் உண்மையான வழியில் இணைப்பை சாத்தியப்படுத்துவோம். இருப்பினும் தேவைப்பட்டால் பலத்தைப் பயன்படுத்தாமல் இருக்க மாட்டோம் என்றார் ஜி ஜின்பிங்.
ஒரு வாரத்திற்கு முன்னெடுக்கப்படும் இந்தக் கூட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் ஜி ஜின்பிங் தெரிவு செய்யப்படுவார். அதுமட்டுமல்லாமல் கட்சியின் பொலிட் பீரோவுக்கு 25 உறுப்பினர்களும், மத்திய குழுவுக்கு 200 பேர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.
சீனாவில் ஜனாதிபதி பொறுப்பை விடவும் கட்சியின் பொதுச் செயலர் பொறுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.