மருத்துவ ஆலோசனையின்றி மருந்து எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட விபரீதம்!
இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் பிராந்தியத்தில் உள்ளது லின்கன்ஷையர் பகுதியில் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்த 16 வயதுடைய லேலா கான் எனும் சிறுமி மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொண்டதால் மரணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுக் குறித்து மேலும் தெரியவருகையில், சுமார் 3 வாரங்களுக்கு முன்பு லேலாவிற்கு மாத விடாய் கால வயிற்று வலி தொடங்கியது.
அவரது தோழிகள் வலியை குறைப்பதற்கு கருத்தடை மாத்திரை எடுத்து கொள்ள ஆலோசனை கூறினார்கள்.
கடந்த (05.11.2023) ஆம் திகதியிலிருந்து லேலாவும் கருத்தடை மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்ள துவங்கியுள்ளார்.
கடந்த (05.12.2023) காலகட்டத்தில் லேலாவிற்கு வயிற்று வலியுடன் தலைவலியும் சேர்ந்து 30 நிமிடங்களுக்கு ஒரு முறை வாந்தி எடுக்க தொடங்கினார்.
மருத்துவ பரிசோதனை
இதையடுத்து, அவரது குடும்பத்தினர் க்ரிம்ஸ்பி பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை மேற்கொண்டபோது "ஸ்டமக் பக்" (stomach bug) என பொதுவாக அழைக்கப்படும் வைரஸ் தாக்குதலில் வரும் இரைப்பை குடல் அழற்சி (viral gastroenteritis) நோயால் லேலா பாதிக்கப்பட்டுள்ளதாகத் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட லேலாவின் நிலை மறு நாள் மோசமடைய தொடங்கி, வலியில் அலற தொடங்கினார்.
மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல குடும்பத்தினர் முனைந்த போது நடக்க கூட இயலாமல் குளியலறையில் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, அருகிலிருந்த "டயானா, பிரின்சஸ் ஆஃப் வேல்ஸ்" மருத்துவமனைக்கு லேலாவை அவர் தாயாரும், உறவினரும் காரில் கொண்டு சென்றனர்.
அங்கு நடத்தப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில் லேலாவிற்கு மூளையில் ரத்த கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த (13.12.2023) ஆம் திகதி , ஹல் ராயல் மருத்துவமனையில் அக்கட்டியை அகற்ற லேலாவிற்கு மூளை அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் துரதிர்ஷ்டவசமாக மூளைச்சாவு அடைந்து விட்டார்.
குதூகலமாக கிறிஸ்துமஸ் கொண்டாட நினைத்த லேலா குடும்பம் அவரை இழந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
லேலாவின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். அவை 5 உயிர்களை காத்ததாக லேலாவின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.
தக்க சமயத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனையை பெறாமல் பிறர் பரிந்துரையில் மருந்துகள் உட்கொள்வதில் அதிக ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.