அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தமிழ் இளைஞன் விபரீத முடிவு; வழக்கறிஞர்கள் போராட்டம்
அவுஸ்திரேலியா - மெல்பேர்னில் 23 வயதுடைய இலங்கைத் தமிழ் ஏதிலி ஒருவர் தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இளைஞனின் மரணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்குள்ள ஏதிலி வழக்கறிஞர்கள் நேற்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
11 வருடங்களாக இணைப்பு வீசா
சம்பவத்தில் இலங்கைத் தமிழரான மனோ யோகலிங்கம் என்ற இளைஞர், கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சென்று, சுமார் 11 வருடங்களாக இணைப்பு வீசாவில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நோபல் பார்க்கில் உள்ள ஸ்கேட் பூங்காவில் வைத்து அவர் தமக்குத் தாமே தீ மூட்டிக்கொண்டாரென தெரிவிக்கப்படுகிறது.
உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
இந்நிலையில் குறித்த இளைஞர் நீண்டகாலமாக இணைப்பு வீசாவில் தங்க வைக்கப்பட்டிருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலே அவரது மரணத்துக்குக் காரணம் என குற்றம் சுமத்தப்படுகிறது.
அதேசமயம் 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய "ஃபாஸ்ட்-ட்ரெக்" முறையின் கீழ், குறித்த இளைஞரின் ஏதிலி அந்தஸ்துக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.