பிரித்தானிய பவுண்ட் மதிப்பு வீழ்ச்சி தொடர்பில் தமிழர் வெளியிட்ட தகவல்!
பிரித்தானிய நாணயமான பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளமையால் பிரித்தானிய சந்தை ஆட்டங்காண ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அது உள்நாட்டு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகப் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாணய மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவால் எரிபொருள் செலவுகள், வெளிநாட்டுச் செலவுகள் ஆகியவை அதிகரித்துள்ளதை எண்ணி மக்கள் வருந்துகின்றனர்.
வெளிநாட்டுக்குச் செல்வோர் பணத்தை மாற்றுவதற்குக் கூடுதல் செலவுகளைச் செய்ய நேரிடும். இறக்குமதி செய்யும் பொருள்களுக்கான விலைகளும் அதிகரித்துள்ளன.
எரிபொருள் விலைகள் அமெரிக்க டொலரில் நிர்ணயிக்கப்படுவதால் எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளது குமார் என்ற தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரித்தானிய பணவீக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தைக் கூட்டத் தயங்கமாட்டாது என்று இங்கிலாந்தின் மத்திய வங்கி கூறியுள்ளது.
வங்கி கடந்த வாரம் அதன் வட்டி விகிதத்தை 14 ஆண்டுகள் காணாத அளவில் 2.25 சதவீதம் அதிகரிப்பதாகக் கூறியிருந்தது. வட்டி விகிதம் அடுத்த ஆண்டு 6 சதவீதம் வரை எட்டக்கூடும் என்று பொருளியல் நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் மக்கள் வீட்டு அடைமானக் கடன்களுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சில வங்கிகளும் கடன் கொடுக்கும் மற்ற அமைப்புகளும் வீட்டுக் கடன் திட்டங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளன. ஒரே நாளில் சுமார் 300 திட்டங்கள் மீட்டுக்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் வரிகளைக் குறைப்பதோடு கடன் பெறும் போக்கை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
அதன்வழி பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிப்பது அதன் எண்ணமாகும். எப்படியிருப்பினும் அந்நடவடிக்கை பணவீக்கத்தை மோசமாக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.