கனடாவின் ஒட்டாவாவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நாள்
தமிழின அழிப்பு நினைவு நாள் நேற்று(18) கனேடிய தலைநகர் ஒட்டாவாவில் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நினைவுகூரப்பட்டுள்ளது.
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சரும், ஸ்காபுரோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கரி ஆனந்தசங்கரி, கார்ல்ரன் தொகுதியின் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புரூஸ் பான்ஜோய், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் வாழும் சாட்சியங்கள், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் உட்பட 300இற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு இந்த நாளை நினைவுகூர்ந்துள்ளனர்.
தமிழ் இனப்படுகொலைகளின் பொறுப்புக்கூறலுக்கு
தமிழினப்படுகொலை நினைவு நாளாக மே 18 கனேடிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு மூன்றாவது வருடமாகவும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 16 வருட வலிமிகுந்த நினைவுநாளை ஒட்டி ஒட்டாவாவின் தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைந்து வழமைபோல இவ்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் அடையாளக் குறியீடாக சிறிய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி காட்சிப்படுத்தப்பட்டு பெருந்திரளானோர் ஒவ்வொருவராக அஞ்சலி செலுத்தியிருந்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
அமைச்சர் கரி ஆனந்தசங்கரியின் உரையில் தமிழ் இனப்படுகொலைகளின் பொறுப்புக்கூறலுக்கும் நீதிக்குமான பயணத்தில் தனதும் கனேடிய அரசினதும் பற்றுறுதியை மீள உறுதிப்படுத்தியிருந்தார்.
தமிழின அழிப்பின் சாட்சியங்கள்
தொடர்ந்து தமிழின அழிப்பு செயற்பாடுகளுக்கான பொறுப்புக்கூறலில் கனேடிய அரசின் உறுதிப்பாட்டை பிரதமரின் செய்தி உறுதிப்படுத்தியிருந்தது.
மேலும், கனேடிய எதிர்க்கட்சியும் இன அழிப்பு விடயத்தில் தமிழர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதில் தான் உறுதியாக இருப்பதை மீள வலியுறுத்தியிருந்தது.
தமிழின அழிப்பின் சாட்சியங்களாக ஆவணங்களாக அண்மைக்காலத்தில் வெளியாகிய மூன்று நூல்கள் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதிநாட்களின் நினைவலைகள் மீட்டப்பட்டன.