பள்ளி மாணவர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியர் மீது வழக்கு
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் உள்ள பிக்டோ கவுண்டி பகுதியில் செயல்படும் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு தகாத முறையில் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிவர்ட்டனில் அமைந்துள்ள 'டாக்டர் W.A. மேக்லியோட் ஒருங்கிணைந்த பள்ளியில்' ஆசிரியர் ஒருவர் மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கடந்த செப்டம்பர் 10 அன்று கனடிய பொலிஸாருக்கு புகார் கிடைத்தது.
தொடர் விசாரணையில், நடப்பு கல்வியாண்டில் இதேபோன்று மேலும் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது போலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, பைபிள் ஹில் பகுதியைச் சேர்ந்த மேத்யூ டோனஹு என்ற ஆசிரியர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 53 வயது ஆசிரியர் மேத்யூ டோனஹு மீது பின்வரும் தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் கவலையளிக்கின்றன. நாங்கள் இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம்.பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்குத் தேவையான உளவியல் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் மீது புகார் எழுந்த உடனேயே, அவர் பள்ளியிலிருந்தும் மாணவர்களை அணுகுவதிலிருந்தும் உடனடியாக நீக்கப்பட்டதாக 'சிக்னெக்டோ சென்ட்ரல் ரீஜனல் சென்டர் ஃபார் எஜுகேஷன்' தெரிவித்துள்ளது.
மேலும், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகப் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை பிக்டோ மாகாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மேத்யூ டோனஹுவுக்குக் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.
குறித்த ஆசிரியர், பூங்காக்கள், பள்ளிகள், குழந்தைகள் காப்பகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமூக மையங்களுக்குச் செல்ல முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 19ம் திகதி காலை 9:30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மேலும் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனப் போலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 902-485-4333 என்ற எண்ணில் பிக்டோ கவுண்டி மாவட்ட காவல் நிலையத்தையோ அல்லது 1-800-222-TIPS (8477) என்ற எண்ணில் குற்றத்தடுப்புப் பிரிவையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.