ஆசிரியர்களால் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடு: முன்வைக்கும் கோரிக்கை
போர்த்துகல் நாட்டின் தலைநகரில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சமீப ஆண்டுகளில் தலைநகர் லிஸ்பனில் ஏற்படாத நெருக்கடியை இந்த போராட்டம் ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதாகைகளை ஏந்திய ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கல்வி அமைச்சர் ஜோவா கோஸ்டா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
போர்த்துகல் நாட்டில் மிக குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர்களின் மாத வருவாயானது 1100 யூரோ என கூறப்படுகிறது. ஆனால் அதிக ஊதியம் பெறும் ஆசிரியர்களின் மாத வருவாயானது 2,000 யூரோ தொகைக்கும் மிக குறைவு என்றே கூறுகின்றனர்.
விலைவாசி உயர்வு அதிகரித்துள்ள சூழலில் தற்போதைய ஊதியம் மிகவும் குறைவு என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அரசியல்வாதிகள் போன்று ஊழலில் சிக்குவதில்லை என குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள், தங்கள் வாழ்க்கையை கல்விக்காக செலவிடுபவர்கள் தாங்கள் எனவும், உரிய ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாக ஆசிரியர்களுக்காக எந்த அரசாங்கமும் போதுமான உதவிகள் மேற்கொண்டதில்லை எனவும், குடியிருப்பில் இருந்து வெகு தொலைவில் ஆசிரியர்களை பணிக்கு நியமிக்கும் போக்கும் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே போர்த்துகல் நாட்டில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மாணவர்கள் பலர் பாதிக்கப்படும் சூழல் உருவானது.