ஒன்றாரியோ நகரசபைத் தேர்தல்களின் முக்கிய வெற்றியாளர்கள் ஒரே பார்வையில்...
ஹமில்டன் நகரசபைத் தேர்தலில், ஒன்றாரியோ என்.டி.பி. கட்சியின் தலைவர் அன்ட்ரியா ஹோர்வாத் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தனது அரசியல் வாழ்க்கையை எங்கு ஆரம்பித்தாரோ அதே இடத்தில் ஹோர்வாத் மீண்டும் புதிய ஆரம்பத்தை பதிவு செய்துள்ளார். மாகாண கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகியதனை தொடர்ந்து அவர் இவ்வாறு நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்.
வோகன் நகரசபைத் தேர்தலில் ஒன்றாரியோவின் லீபரல் கட்சித் தலைவர் ஸ்டீவன் டெல் டுக்கா மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மிகக் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் அவர் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஒட்டாவா நகரசபைத் தேர்தலில் முன்னாள் ஊடகவியலாளர் மார்க் சட்கிளிப்பே மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுவரையில் பதவி வகித்து வந்த ஜிம் வெட்சன் தோல்வியடைந்துள்ளார்.
றொரன்டோவின் மேயர் ஜோன் டோரி மீண்டும் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாட்டின் மிகவும் சனத்தொகை மிக்க நகரமாக றொரன்டோ காணப்படுகின்றது. நகர மேயர் பதவிக்காக 30 பேர் போட்டியிட்ட போதிலும் டோரி 60 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு வெற்றியீட்டியுள்ளார்.
பிரம்டனின் மேயராக மீண்டும் பெற்றரிக் பிரவுண் தெரிவாகியுள்ளார். இரண்டாவது தடவையாக பிரவுண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வீட்டுப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சவால்களை வெற்றிகொள்ளவதாக தெரிவித்து தேர்தலில் பிரச்சாரம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தண்டர் பேயின் மேயராக கென் பொஸ்க்கோவ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் 1997ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரையில் மேயராக கடமையாற்றியுள்ளார்.
வுட்ஸ்டொக்கின் மேயராக ஜெரி எச்சியானோ தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய மேயர் ட்ரவர் பிரிட்டிச் படு தோல்வியடைந்துள்ளார்.
போர்ட் கொல்போர்னின் மேயராக பில் ஸ்டீலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். பில் தனது சகோதரரான சார்ளஸ் ஸ்டீலியை தோற்கடித்து தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.
லண்டனின் மேயராக ஜோஸ் மோர்கன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நகரசபை உறுப்பினராகவும் பிரதி மேயராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மில்டனின் மேயராக கோர்ட் கர்ட்னாஸ் 14ம் தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மிக சொற்ப அளவு வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் மேயர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.