பூட்டிய அறைக்குள் பத்து வருடங்களாக வாழ்ந்துவந்த சகோதரர்கள்; அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்
பத்து வருடங்களாக 2 சகோதரர்கள், ஒரு சகோதரி பூட்டிய அறையை விட்டு வெளியே வராமல் இருந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு வீட்டில், 10 ஆண்டுகளாக 2 சகோதரர்கள், ஒரு சகோதரி அறை ஒன்றுக்குள் தங்களைத் தாங்களே பூட்டிக்கொண்டிருப்பதாகவும், அவர்கள் வெளியே வரவில்லை என்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட வீட்டுக்கு தொண்டு நிறுவன ஊழியர்கள் அறையை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அந்த அறை கொஞ்சம் கூட வெளிச்சம் இல்லாமல் இருளாக இருந்துள்ளது. மேலும் மனிதக்கழிவுகள், வீணாகிப்போன உணவுகள், காகிதக் குப்பைகள் என மிகவும் மோசமான சூழலில் அந்த 3 பேர் இருப்பதையும் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மூன்று பேரும் பரட்டைத் தலையுடன், பிச்சைக்காரர்களைப் போல காணப்பட்டனர். மிகவும் உடல் நலிவுற்றிருந்த அவர்களால் எழுந்துநிற்கக்கூட முடியவில்லை. வெளியுலகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் ஒரு அறைக்குள்ளேயே 10 ஆண்டுகளை கழித்துவிட்ட அந்த மூவரும் நன்கு படித்த பட்டதாரிகள் என்பதை அறிந்த தொண்டு நிறுவனத்தினர் மேலும் அதிர்ந்துபோயினர்.
அந்த மூவரில் மூத்தவரான அம்ரிஷ் ( 42) பி.ஏ., எல்.எல்.பி படித்துவிட்டு வக்கீலாக பணிபுரிந்தவர், சகோதரி மேக்னா (39) எம்.ஏ. உளவியல் பட்டம் பெற்றவர், இளையவரான விஸ் (30) பி.ஏ. படித்துவிட்டு வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரராக இருந்துள்ளார்.
பத்து ஆண்களுக்கு முன் தங்கள் தாய் இறந்ததால், மனரீதியாக பாதிக்கப்பட்ட அவர்கள் தங்களைத் தாங்களே அறைக்குள் பூட்டிக்கொண்டதாக தந்தை படேல் கூறியுள்ளார்.
மேலும் அவர்களது அறைக்கு முன்னால் தினமும் உணவை மட்டும் வைத்துவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் சூனியம் போன்ற மூடநம்பிக்கைகள் காரணமாக தங்களது பிள்ளைகளை படேல் இவ்வாறு செய்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அங்கிருந்து மூவரையும் மீட்ட தொண்டு நிறுவனத்தினர், அவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.