நிதியமைச்சரை தெருவில் ஓடவிட்டு அடித்த போராட்டக்காரர்கள் ; நேபாளத்தில் தொடரும் பதற்றம்
நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது.
தலைநகர் காத்மாண்டுவில் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர்களை நோக்கி பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீ
இதையடுத்து சமூக ஊடகங்கள் மீதான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது. இருப்பினும் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர். இதன் தொடர்ச்சியாக பிரதமர் சர்மா ஒலி மற்றும் அவரை தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவ்டெல் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதற்கிடையே நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடேலை போராட்டக்காரர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்கள் அவரை தெருக்களில் துரத்திச் சென்று தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
முன்னாள் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா மற்றும் அவரது மனைவி, தற்போதைய வெளியுறவு அமைச்சர் அர்ஜு ராணா தியூபா ஆகியோரையும் போராட்டக்காரர்கள் குறிவைத்து தாக்கினர். தாக்குதலில், முன்னாள் நேபாள பிரதமர் மனைவியை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்த நிகழ்வும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.