உக்ரைன் போரில் திருப்பம் ; ரஷ்ய டிரோன்களை சுட்டு வீழ்த்திய போலந்து
உக்ரைன் போரில் அடுத்த கட்டமாக தங்கள் நாட்டில் ஊடுருவிய ரஷ்ய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக போலந்து அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடர்ந்து நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இதுவரை பலன் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து கொண்டே செல்கிறது. ஆளில்லாத டிரோன் உதவியுடன் உக்ரைன் மீது அன்றாடம் குண்டு மழை பொழிகிறது ரஷ்யா.
இவ்வாறு குண்டு வீசிய டிரோன்கள் சில, அண்டை நாடான போலந்துக்குள் ஊடுருவி விட்டன.
இதைக் கண்டறிந்த போலந்து ராணுவம் அவற்றை உடனடியாக சுட்டு வீழ்த்தியது. போலந்து, ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள நாடு. நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய உறுப்பினராகும்.
இந்தக் கூட்டமைப்பில் ஒரு நாட்டுக்கு எதிரான தாக்குதல் அல்லது போர் செயல்பாடு, ஒட்டுமொத்த கூட்டமைப்புக்கும் எதிரான செயல் என்று கருதப்படும்.
அந்த நாட்டுக்கு ஆதரவாக, அனைத்து நாடுகளும் போரில் களம் இறங்க வேண்டும் என்பது நேட்டோ கூட்டமைப்பின் உடன்பாடு. இதனால் போலந்துக்குள் ரஷ்ய டிரோன்கள் ஊடுருவியது, ஐரோப்பிய நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
இதற்கு நேட்டோ கூட்டமைப்பு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று உக்ரைன் மற்றும் போலந்து நாடுகள் வலியுறுத்தி உள்ளன.