போர் பதற்றம் குறையுமா? ட்ரம்ப் தூதர்கள் ஈரான் தரப்புடன் நேரடி பேச்சு
ஈரானுடன் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், போர்நிறுத்தத்தை வலுப்படுத்தவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கோஃப் மற்றும் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
அங்கு அவர்கள் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
அராக்சி ஏற்கனவே இஸ்லாமாபாத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் லீவிட் தெரிவித்துள்ளதாவது,
ஈரானிய தரப்பினர் நேரில் சந்தித்துப் பேச விரும்புவதால், அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் இந்தத் தூதுக்குழுவை அனுப்பியுள்ளார்.
"ராஜதந்திரத்திற்கு எப்போதும் ஒரு வாய்ப்பை வழங்க ஜனாதிபதி தயாராக இருக்கிறார்" என்று லீவிட் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் எட்டப்படும் என அமெரிக்கா நம்புகிறது.
தேவைப்பட்டால் அமெரிக்கத் துணை ஜனாதிபதியையும் பாகிஸ்தானுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.