மனிதாபிமான உதவி பெயரில் பயங்கரவாத நிதி ; இத்தாலியில் அதிரடி கைது
இத்தாலியில் பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான உதவி என்ற பெயரில் ஹமாஸ் அமைப்புக்கு சுமார் 7 மில்லியன் யூரோக்கள் நிதி திரட்டி அனுப்பியதாக ஒன்பது பேரை இத்தாலியத் காவல்துறை கைது செய்துள்ளது.
இத்தாலியின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு மற்றும் நிதிப் பிரிவு காவல்துறை இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 2023 ஆம ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்த புலனாய்வு விசாரணைகள் தொடங்கப்பட்டன.

இந்தநிலையில், பாலஸ்தீன பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் நிதி திரட்டப்படுவதாகக் கூறி, ஒரு "சிக்கலான நிதி திரட்டும் முறையைப்" பயன்படுத்தி ஹமாஸ் அமைப்புக்கு இவர்கள் பணத்தை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திரட்டப்பட்ட நிதியில் 71 சதவீதத்துக்கும் அதிகமான தொகை ஹமாஸின் இராணுவப் பிரிவிக்கும், தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் குடும்பங்களுக்கும் பயங்கரவாத வழக்குகளில் கைதானவர்களுக்குமான ஆதரவு நிதியாகவும் மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது நடவடிக்கையோடு சேர்த்து, சுமார் 8 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான சொத்துக்களையும் இத்தாலியக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. கைதானவர்களில் ஒருவர் இத்தாலியில் உள்ள 'பாலஸ்தீன சங்கத்தின்' தலைவராகச் செயல்பட்டு வந்த ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸின் நிதி திரட்டும் அமைப்பில் இவர் முக்கியப் பங்கு வகித்ததாகக் காவல்துறை கருதுகிறது. இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.