மகனின் சடலத்துடன் 4 ஆண்டுகள் வசித்து வந்த தந்தை: தொலைபேசி அழைப்பால் வெளியான உண்மை
அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்தில் குடியிருப்பு ஒன்றில் மனித சடலத்தின் எச்சம் மீட்கப்பட்ட நிலையில், அந்த குடியிருப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டெடுக்கப்பட்ட மனித சடலம், அந்த நபரின் சொந்த மகன் என்றே விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் நியூ பாஸ்டன் காவல் துறை தெரிவிக்கையில்,
அண்டை வீட்டாரிடமிருந்து குறித்த நபர் தொடர்பில் நலம் விசாரிக்க தொலைபேசியில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே அந்த குடியிருப்புக்கு சென்றதாக தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை மதியத்திற்கு மேல், நியூ பாஸ்டன் பொலிசார் டேவிட் மெக்மைக்கேல் என்பவரின் குடியிருப்புக்கு சென்றுள்ளனர். விசாரணையின் ஒருபகுதியாக குடியிருப்புக்குள் நுழைந்து பொலிசார் சோதனை மேற்கொண்ட போது, அந்த நபரின் சமையலறையில் மனித சடலத்தின் எச்சங்களை கண்டுள்ளனர்.
இதனையடுத்து, அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட பொலிசார், 2018 மே மாதம் இறந்த தமது மகனின் சடலம் அது என அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நியூ பாஸ்டன் பொலிசாரால் டேவிட் மெக்மைக்கேல் கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மீண்டும் அந்த குடியிருப்புக்குள் சோதனை மேற்கொண்டு, அந்த சடலம் டேவிட் மெக்மைக்கேல் என்பவரின் மகன் என்பதை உறுதி செய்துள்ளனர்.
பின்னர் உடற்கூராய்வுக்காக சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக நியூ பாஸ்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உரியமுறையில் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்காமல், மனித சடலத்தை துஸ்பிரயோகம் செய்ததாக கூறி அவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.