அமெரிக்க சீக்ரெட் சர்வீஸில் ஊடுருவிய "கறுப்பு ஆடுகள்" சிக்கின!
பாகிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்கு அமெரிக்கா காரணம் என்று இம்ரான் கான்(Imran Khan) குற்றம் சாடியுள்ள நிலையில், பாக். உளவாளிகள் என்று கூறப்படும் சிலரை அமெரிக்கா கைது செய்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு(Imran Khan) எதிராக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சிகளும் திரும்பி உள்ளதால் அவர் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந்தச் சூழலில் அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பில் பாகிஸ்தான் உளவாளிகள் ஊடுருவ முயன்றதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபரின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ரகசிய சேவை அமைப்பு உள்ளிட்ட அமெரிக்க உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புக்குள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் உளவாளிகள் ஊடுருவ முயன்றதாகவும் அதை தாங்கள் வெற்றிகரமாக முறியடித்ததாகவும் அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அரியன் தஹெர்சாதே(Arian Taherzadeh) மற்றும் ஹைதர் அலி (Haider Ali) ஆகிய இருவரைத் தென்கிழக்கு வாஷிங்டனில் வைத்து அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
அமெரிக்க அதிகாரியைப் போலத் தவறாக ஆள்மாறாட்டம் செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ரகசிய சேவை அமைப்பின் நான்கு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இவர்கள் கொலம்பியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது எஃப்.பி.ஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹைதர் அலி(Haider Ali) தனக்குப் பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் ஏஜென்சியுடன் தொடர்பு உள்ளது என்று தனது நண்பர்களிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
இந்தத் தகவலை உறுதி செய்யவில்லை என்றும் இருப்பினும் இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், ஹைதர் அலிக்கு(Haider Ali) பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்தும் பல விசாக்கள் இருந்ததாக அமலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையில் தாங்கள் பணியாற்றுவதைப் போல அரியன் தஹெர்சாதே(Arian Taherzadeh) மற்றும் ஹைதர் அலி (Haider Ali)ஆகிய இருவரும் காட்டிக் கொண்டுள்ளனர்.
தன்னை அமெரிக்க உயர் அதிகாரி போலக் காட்டிக் கொண்ட தஹெர்சாதே (Arian Taherzadeh)அமெரிக்காவின் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளுக்கு இலவசமாக வீடுகள் ஐபோன்கள், கண்காணிப்பு அமைப்புகள், தொலைக்காட்சி, துப்பாக்கி ஆகியவற்றை இலவசமாக வழங்கி உள்ளார்.
மேலும், அரசு வாகனம் என்று கூறி ஒரு வாகனத்தையும் இவர்களிடம் வழங்கி உள்ளார். பைடனின்(joe biden) மனைவி குறிப்பாக அமெரிக்க அதிபர் பைடனின் மனைவியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்து ஒரு அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டிற்கு 2,000 டாலர் மதிப்புடைய துப்பாக்கி ஒன்றையும் தர முன் வந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அமெரிக்காவின் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் 4 பேர் கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டனர். இருவருமே தலைநகர் வாஷிங்டன் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கி உள்ளனர்.
மேலும், இருவரும் தலைநகர் வாஷிங்டனில் பல பகுதிகளில் வீடியோ கண்காணிப்பு அமைப்பையும் ஏற்படுத்தி உள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள தொலைப்பேசி உரையாடல்களையும் இருவரும் கண்காணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்கு வசிக்கும் மக்களின் தனிப்பட்ட தகவல்களையும் அணுகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அமெரிக்கா பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அவர்கள் கிப்டுகளையும் வழங்கி உள்ளனர்.
இதையடுத்து வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை இருவரும் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.