நிலநடுக்கத்தின் போது பிரார்த்தனை செய்த சிறுவன்; நடந்த அதிசய நிகழ்வு!
துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த நாடுகளை உலுக்கி போட்டு உள்ளது. முக்கியமாக சிரியாவில் புரட்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் அங்கே உலக நாட்டு உதவிகள் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் அங்கே ராணுவமும் உதவிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சிரியா போருக்கு இடையில் இந்த நிலநடுக்கம் அந்த நாட்டை மேலும் உலுக்கி போட்டு இருக்கிறது.
சிரியாவில் மீட்பு பணிகள் கடினமாகி வரும் நிலையில்தான் அந்த நாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவன் கட்டிடத்தில் சிக்கிக்கொண்டு கடவுளை வேண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மொத்தம் 4 நிலநடுக்கங்கள் சிரியா - துருக்கி எல்லையில் நடைபெற்று உள்ளன. 7.8 ரிக்டர், 7.5 ரிக்டர், 6 ரிக்டர், 5.7 ரிக்டர் அளவுகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. துருக்கியில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தையும், சிரியாவில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தையும் கடந்து உள்ளது.
இது அதிகாரபூர்வமான பலி எண்ணிக்கை மட்டும்தான். உண்மையான பலி எண்ணிக்கை அங்கு 25 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிரியாவில் 5700 பேர் இதுவரை நிலநடுக்கம் காரணமாக காயம் அடைந்து உள்ளனர்.
சிரியாவில் போராளிகள் வசம் உள்ள பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் தற்போதும் சிக்கல் நிலவி வருகிறது. அங்கே பிற நாட்டு ராணுவம், சிரியா ராணுவத்தை அனுமதிக்க சிரியா போராளிகள் விரும்பவில்லை.
இதனால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் சிரியாவில் கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் இரண்டாம் மாடி கட்டிடத்தில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருக்கின்றான். அவருக்கு மேலே கட்டிடத்தின் இடிந்த பாகங்கள் விழுந்து கிடக்கின்றன.
இந்த நிலையில் அந்த சிறுவனை மீட்க நீண்ட நேரமாக மீட்பு படையினர் வரவில்லை. தனக்கு மேலே இரண்டு மாடிகட்டிடங்கள் இருந்ததால் எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் அந்த சிறுவன் உயிருக்கு போராடியபடி இருந்துள்ளான். உயிருக்கு போராட்டம் என்ன செய்வது என்று தெரியாமல் மனதை விட்ட அந்த சிறுவன் கடைசியில் அங்கேயே கடவுளை வேண்ட தொடங்கி உள்ளான்.
இஸ்லாமில் shahadah எனப்படும் வேண்டுதல் முறையை அவன் மேற்கொண்டு உள்ளான். அதாவது இறப்பிற்கு முன் பேச கூடிய திறன் இருந்தால் அல்லாவை மட்டுமே கடவுளாக ஏற்றுக்கொள்வதாக கூறும் வகையில் சில வாசகங்கள் குரானில் உள்ளன. அந்த வாசகங்களை கூறி அந்த சிறுவன் அங்கேயே பிரார்த்தனை செய்து இருக்கிறான். கீழே இருந்த இன்னொரு நபரும் அவனை காப்பாற்ற முடியாமல் சோகத்தில்.பிரார்த்தனை செய்து உள்ளார்.
அது கிட்டத்தட்ட மரணத்தை ஏற்றுக்கொண்ட பின் சொல்ல கூடிய வரிகள் ஆகும். அதை சிறுவன் ஒருவன் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் சொன்னது பெரிய அளவில் மனதை உலுக்கும் விதமாக இருந்தது. அதன்பின் சிறுவன் அங்கேயே தொங்கியபடி மயங்கி விட்டான்.
ஆனால் சில நிமிடங்களில் அங்கே வந்த மீட்பு படையினர், அவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த சிறுவன் பிழைத்துவிட்டதாகவும், அவனுக்கு உடலில் சிறிய அளவில் காயங்கள் மட்டும் இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.