நள்ளிரவில் பயங்கரத் தீ விபத்து! 5 வாகனங்கள் முற்றிலும் சேதம் – தீவிர விசாரணை!
கனடாவின் கால்கரி நகரிலுள்ள 'சிட்டிஸ்கேப்' பகுதியில் அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் ஐந்து வாகனங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
அதிகாலை 2 மணியளவில் 'சிட்டிலைன் காமன் பகுதியில் தீப்பற்றி எரிவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, கால்கரி காவல்துறையும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்தி, விசாரணையைத் தொடங்குவதற்காக அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டது.
சேதமடைந்த நான்கு வாகனங்கள் கபேன் மூலமாக அகற்றப்பட்ட நிலையில், கடுமையாக எரிந்த வெள்ளை நிற வேன் ஒன்று சம்பவ இடத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு அருகில் வசிக்கும் லக் சாது என்பவர் கூறுகையில், நள்ளிரவில் கேட்ட பலத்த சத்தம் ஏதோ வாகன விபத்தினால் ஏற்பட்டது என்று முதலில் நினைத்ததாகத் தெரிவித்தார்.
இந்தப் பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. கார் வெடித்துச் சிதறியது போல் இருந்தது என குறிப்பிட்டார். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது திட்டமிட்டு வைக்கப்பட்ட தீயா என்பதை ஆராயக் கால்கரி காவல்துறையின் 'தீவைப்புப் பிரிவு' விசாரணைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
எனினும், தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.