கீவ் நகருக்கு சென்ற 3 ஐரோப்பிய நாட்டின் தலைவர்கள்
போர் பதற்றத்திற்கு மத்தியில் 3 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கீவ் நகருக்கு சென்றுள்ளனர்.
உக்ரைன் தலைநகர் மீதான ரஷிய படைகளின் பிடி இறுகுகிறது. அந்த நகரை குண்டுவெடிப்புகளால் ரஷிய படைகள் குலுங்க வைத்து வருகின்றன. அதன் புறநகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று குண்டுவெடிப்புகளால் பெருத்த சேதம் அடைந்தது.
இந்த தருணத்தில் நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கிற 3 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ரெயில் மூலம் கீவ் நகருக்கு நேற்று விரைந்தனர்.
அவர்கள் போலந்து பிரதமர் மேத்யூஸ் மோராவீக்கி(Matthews Moravicki), செக் குடியரசின் பிரதமர் பீட்டர் பியாலா(Peter Piala), சுலோவேனியாவின் பிரதமர் ஜானேஸ் ஜான்சா(Janes Jonza) ஆகியோர் ஆவார்கள். போலந்தின் மூத்த தலைவர் ஜரோஸ்லா காசின்ஸ்கி(Jaroslav Kaczynski) யும் இந்த குழுவுடன் இணைந்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதற்காக ஐரோப்பிய கூட்டமைப்பின் ஒரு பணியாக போர் மண்டலத்துக்கு சென்றிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். ஐரோப்பிய கூட்டமைப்பின் அதிகாரிகள், உக்ரைனில் பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதாக கூறியபோதிலும், மத்திய ஐரோப்பிய தலைவர்கள் பயணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இவர்கள் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி(Vladimir Zhelensky)யையும், பிரதமர் டெனிஸ் ஷிமிகாலை(Denise Shimigala)யும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.
இந்த பயணத்தின் நோக்கம் குறித்து செக் குடியரசின் பிரதமர் பீட்டர் பியாலா (Peter Piala)கூறும்போது, “இந்த பயணத்தின் நோக்கம், உக்ரைனுக்கும், அதன் சுதந்திரத்துக்கும் ஐரோப்பிய கூட்டமைப்பின் தெளிவான ஆதரவை வெளிப்படுத்துவதுதான்” என குறிப்பிட்டார்.
இந்நிலையில் போலந்து பிரதமர் மேத்யூஸ் மோராவீக்கி (Matthews Moravicki) ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ``நானும் மற்ற தலைவர்களும் உக்ரைன் செல்வது வரலாற்று சிறப்புமிக்க பயணம் ஆகும். இது குறித்து ஐ.நா. சபைக்கு தெரிவித்துள்ளோம்.
உலகுக்கு இதுபோன்ற நெருக்கடியான காலங்களில் வரலாறு புனையப்பட்ட இடத்தில் இருப்பது எங்கள் கடமை.
ஏனென்றால் இது எங்களைப் பற்றியது அல்ல. ஆனால் கொடுங்கோன்மை இல்லாத உலகில் வாழ்வதற்கு தகுதியான எங்கள் குழந்தைகளைப்பற்றியது” என்று குறிப்பிட்டுள்ளார்.