நீருக்கு அடியில் சதுரங்கப் போட்டி ; உலக செம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது நெதர்லாந்து
நெதர்லாந்தின் குரோனிங்கன் (Groningen) நகரில் நடைபெற்ற உலக டைவிங் செஸ் (Diving Chess) செம்பியன்ஷிப் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த வீரர்களே முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த போட்டி வழக்கமான சதுரங்கப் போட்டிகளைப் போலன்றி, இது நீச்சல் தடாகத்தின் அடியில் மூச்சைப் பிடித்துக்கொண்டு விளையாடப்படும் ஒரு வினோதமான மற்றும் சவாலான விளையாட்டாகும்.

இம்முறை நடைபெற்ற உலக செம்பியன்ஷிப் போட்டியில் 40 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்தப் போட்டியில் சதுரங்கப் பலகைகள் காந்தத் தன்மையுடனும் (Magnetic boards), காய்கள் பாரமானவையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு வீரரும் தண்ணீருக்கு அடியில் மூழ்கி, ஒரே மூச்சில் ஒரு நகர்வை (Move) மேற்கொண்டுவிட்டு, மீண்டும் சுவாசிப்பதற்காக மேலே வர வேண்டும்.
சில சமயங்களில் எதிராளியை திணறடிப்பதற்காக மிக வேகமாக நகர்வுகள் மேற்கொள்ளப்படும். இது வீரர்களின் நிதானத்தையும், மூச்சைக் கட்டுப்படுத்தும் திறனையும் ஒரே நேரத்தில் சோதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த போட்டியில் நெதர்லாந்தின் முன்னாள்செம்பியனான சியோன் கோலன் (Zyon Kollen) ஆண்கள் பிரிவில் உலக செம்பியன் பட்டத்தை வென்றார்.

நெதர்லாந்தைச் சேர்ந்த 17 வயதான ஜோசபின் டேமன் (Josephine Damen) பெண்கள் பிரிவில் உலக செம்பியனாக முடிசூட்டப்பட்டார்.
இந்த 'டைவிங் செஸ்' விளையாட்டானது அமெரிக்க சதுரங்க வீரரான ஏடன் இல்ஃபெல்ட் (Etan Ilfeld) என்பவரால் உருவாக்கப்பட்டது.
அறிவுத்திறனுடன் உடல் வலிமையையும் இணைக்கும் ஒரு விளையாட்டாக இது தற்போது உலகளவில் பிரபலம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.