ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு; முதலிடம் பிடித்த அமெரிக்கா!
பிரான்ஸ் - பாரிஸ் நகரில் 16 நாட்களாக நடைபெற்று வந்த 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (12) அதிகாலை நிறைவடைந்த நிலையில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.
206 நாடுகளைச் சேர்ந்த 10,714 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த ஆண்டு ஒலிம்பிக்கின் கடைசி நிமிடத்தில் அமெரிக்கா பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்ட சீனா
அதுவரை பதக்கப் பட்டியலில் முன்னிலை வகித்து வந்த சீனா இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதேசயம அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 பதக்கங்களை வென்றது.
இரண்டாவது இடத்தில் உள்ள சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களை வென்றது. மூன்றாவது இடத்தை ஜப்பான் பிடித்தது. பிரமாண்டமான நிறைவு விழாவிற்கு அனைத்து நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்கள் ஸ்டேட் டி பிரான்ஸ் வந்தடைந்தனர்.
இதன்போது இலங்கைக் கொடியை ஏந்திச் செல்லும் பொறுப்பு தருஷி கருணாரத்ன மற்றும் அருண தர்ஷன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. பரிஸ் ஒலிம்பிக் திருவிழாவின் நிறைவைக் காண 70,000 பார்வையாளர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக், 2024 பரிஸ் ஒலிம்பிக்ஸ் முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும் 34வது ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா நடத்தும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து ஒலிம்பிக் கொடி அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது.