ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவனின் கதி
ஆப்கானிஸ்தானின் சாபுல் மாகாணத்தில் ஷொகாக் எனும் கிராமத்தில் 33 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் 9 வயது சிறுவன் வீழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
ஹைதர் என்ற 9 வயதான குறித்த சிறுவன்,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்படி ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டார்.
இதன்படி தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து குறித்த சிறுவனை மீட்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்,சுமார் 45 மணித்தியாலங்களுக்கு மேலாக அந்த ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியுள்ள சிறுவனை மீட்பதற்கு தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆள்துழை கிணற்றுக்குள் சிக்கிக் கொண்ட சிறுவனுடன் அவரது தந்தை உரையாடும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.
குறித்த சிறுவனை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், நோய் காவு வண்டி மற்றும் பிராணவாயு உட்பட பிற பொருட்கள் தயார் நிலையில் உள்ளதாக அந்நாட்டு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று மொரோக்கோவில் 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட ரயான் அவ்ரம் என்ற 5 வயதான சிறுவன் உயிரிழந்திருந்தார்.
இச்சிறுவன் சுமார் ஐந்து நாட்களாக குறித்த ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த நிலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.எனினும் முயற்சி பலனின்றி சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.