36 ஆண்டுகளில் முதன்முறையாக சந்தித்து கொண்ட இரட்டையர்கள்!
தென் கொரியாவில் பிறக்கும்போது பிரிக்கப்பட்ட இரட்டையர்கள், 36 ஆண்டுகளில் முதன் முறையாக சந்தித்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் சுவாரச்யம் என்னவெனில் அவர்கள் ஒருவரின் 11 வயது மகள் தான் இந்த சந்திப்புக்கு காரணமாக அமைந்திருக்கிறார். தென் கொரியாவில் பிறந்த மோலி சினெர்ட் (Molly Synert) மற்றும் எமிலி புஷ்னெல் (Emily Bushnell) என்ற இரண்டை பெண்கள், பிறந்த போதே, இரு வெவ்வேறு குடும்பங்களால் தத்து எடுக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்கள் தங்களுடன் பிறந்த மற்றொருவர் இருந்திருக்கிறார் என தெரியாமலேயே தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை கடத்தி இருக்கின்றனர். சமீபத்தில் தங்களின் 36வது பிறந்தநாளில் இவர்கள் ஒருவரை ஒருவர் முதல் முறையாக சந்தித்து கொண்டனர். ஒரே மாதிரியாக இருக்கும் இவர்கள், தாங்கள் இரட்டையர்கள் என்பதை ஒருபோதும் அறிந்ததில்லை.
டி.என்.ஏ சோதனை மூலம் இருவரும் தனித்தனியாக தங்கள் கடந்த கால தகவல்களைத் தேடத் தொடங்கும் வரை ஒருவருக்கொருவர் இருப்பதைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது.
இந்நிலையில் 36 வயதான பெண்கள் தங்களுக்கு இரட்டையர்கள் இருப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார்கள். இதனை தொடர்ந்து இமெயில் மற்றும் சாட்டிங் மூலம் ஒருவருக்கொருவர் தங்கள் தகவல்களை பகிர்ந்து தாங்கள் இரட்டையர்கள் என்பதை உறுதிப்படுத்தி கொண்டனர். அத்துடன் வரவிருக்கும் தங்களது பிறந்த நாளன்று சந்தித்து கொள்ளவும் அவர்கள் முடிவு செய்து கொண்டனர்.
இதனையடுத்து சமீபத்தில் தங்கள் பிறந்தநாளன்று, சகோதரிகள் இருவரும் முதல் முறையாக ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர். சினெர்ட்டை (Molly Synert) புளோரிடாவில் உள்ள குடும்பமும், புஷ்னெலை (Emily Bushnell) பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஒரு குடும்பமும் தத்தெடுத்து வளர்த்துள்ளனர். இவர்கள் ஏன் தத்து கொடுக்கப்பட்டார்கள் என்ற தகவல் கிடைக்கவில்லை.
அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான கி.மீ தூரத்தில் இருவரும் பிரிந்து வளர்ந்து வந்தனர். புஷ்னலின் 11 வயது மகள் இசபெல், (Isabel)தனது தாயின் வரலாறு குறித்து விளக்கமாக கேட்டிருக்கிறார். இதனையடுத்து அவர் டிஎன்ஏ பரிசோதனை செய்ததில், தற்போது உள்ள குடும்பத்து உறுப்பினர்களுடன் பொருந்தி போகவில்லை.
ஆனால் சேமித்து வைத்திருக்கும் தகவலில் இருந்து, மோலி சினெர்ட் (Molly Synert) என்பவருடன் 49.96 சதவீதம் ஒத்து போய் இருக்கிறது. அப்போது தான், தனது தாயின் இரட்டை சகோதரியை அவர் கண்டுபிடித்திருக்கிறார்.