அவுஸ்திரேலியாவுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்தும் அமெரிக்கா!
அவுஸ்திரேலியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு உறவுகளை மேலும் அதிகரிப்பதற்கு இணங்கியுள்ளன.
சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ பசுபிக்கை உறுதி செய்வதற்காக இரு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க தீர்மானித்துள்ளன. அமெரிக்காவில் அமெரிக்க வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு செயலாளர்களை சந்தித்த பின்னர் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங்கும் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லெசும் இதனை அறிவித்துள்ளனர்.
அன்டனி அல்பெனிஸ் அரசாங்கம் பதவியேற்ற பின்னர் முதல்தடவையாக அவுஸ்திரேலிய அமெரிக்க அமைச்சர்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருநாடுகளினதும் அமைச்சர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் அதிகரித்த பாதுகாப்பு ஒத்துழைப்பு அவுஸ்திரேலியாவில் அமெரிக்க படையினரின் பிரசன்னத்தையும் அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இரு நாடுகளும் ஜப்பானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளன. நாங்கள் முத்தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இணங்கியுள்ளோம் அவுஸ்திரேலியாவில் எங்கள் படை முயற்சிகளில் ஜப்பானை இணைந்து கொள்ளுமாறு கேட்டுள்ளோம் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் பின்னர் அவுஸ்திரேலிய அமைச்சர்கள் ஜப்பான் செல்லவுள்ளனர். இன்றைய சந்திப்பில் மிக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன,ஜப்பான் அவுஸ்திரேலிய அமெரிக்க ஒத்திகைகளில் அதிகளவு தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோளுடன் நாங்கள் இந்த வார இறுதியில் ஜப்பான் செல்லவுள்ளோம் என அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீனா ஆபத்தானது கட்டாயப்படுத்துகின்றது வற்புறுத்துகின்றது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். தாய்வான் பசுபிக் தீவு நாடுகள் கிழக்கு தெற்கு சீன கடல் பகுதியில் சீனாவின் ஆபத்தான கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள் பிராந்தியத்தின் அமைதி ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
சீனா அவுஸ்திரேலியா மீது வரிகள் வர்த்தக தடைகள் போன்றவற்றை விதிப்பது போன்ற கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நிலையில் அமெரிக்கா எவ்வாறு அவுஸ்திரேலியாவிற்கு உதவ முடியும் என்ற கேள்விக்கு சீனாவின் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளை பொறுத்தவரை அதனை புரிந்துகொண்டு அதிலிருந்து விடுபடும் சிறந்த திறமை அவுஸ்திரேலியாவிற்குள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென்(Anthony Blinken) தெரிவித்துள்ளார்.