மீண்டும் வீழ்ச்சியடைந்த பவுண்டின் மதிப்பு !
பிரித்தானியாவின் புதிய சேன்சலர் தனது மினி பட்ஜெட்டை அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை, 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததாக The Sun உள்ளிட்ட பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
மூத்த முதலீடு மற்றும் சந்தை ஆய்வாளரான Susannah Streeter இது குறித்து கூறுகையில்,
சறுக்கு மரத்தில் சறுக்குவது போல, பவுண்டின் மதிப்பு வேகமாக கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் , இன்று காலை மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.
அரசின் பொருளாதார நிர்வாகம் மீதான நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது என்று கூறியுள்ளார். அதேசமயம் புதிதாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள லிஸ் ட்ரஸ்ஸின் அரசு, மக்களுக்கு ஏராளம் வரிச்சலுகைகள் அறிவித்துள்ளது.
அத்துடன், வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் ஆற்றல் பிரச்சினையை எதிர்கொள்ள நிதி உதவியும் செய்வதாக அறிவித்துள்ளதால், அதற்காக ஏராளம் பணம் தேவைப்படுகிறது.
அதற்காக அரசு பெருந்தொகை கடனாக வாங்கவேண்டியுள்ளது. அந்த கடன் குறித்து முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளார்கள்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மினி பட்ஜெட்டில் ஏராளம் வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த பெரிய தொகையை அரசு எப்படி ஈடு செய்யும் என்ற அச்சம் உருவாகியுள்ளதே பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதற்கு காரணமாக கூறப்படுகிறது.
அதேவேளை , பிரதமர் இல்ல செய்தித்தொடர்பாளர், சந்தை அல்லது நாணயம் தொடர்பிலான விடயங்கள் குறித்து நாங்கள் கருத்துத் தெரிவிப்பதில்லை என கூறிவிட்டதாக பிரித்தானிய தகவல்கள் கூறுகின்றன.