இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள போர்!
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையில் யுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், இஸ்ரேலில் இருக்கும் வெளிநாட்டினர் விமான நிலையங்களில் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலஸ்தீனத்திலிருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே யுத்தம் ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் 20 நிமிடங்களில் இஸ்ரேல் மீது 5000 ஏவுகணைகளை ஏவியுள்ளது.
இஸ்ரேல் தற்போது போர்க்களத்தில் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாது தனது X தளத்தில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஏவுகணை மூலம் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில், இஸ்ரேலில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதாகவும் 500 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, பாலஸ்தீனர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் உரிமையை பெற்றுள்ளனர் என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார். இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது.
இந்த பகுதி ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. இவ்வமைப்புதான் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்ட கால குற்றச்சாட்டாகக் காணப்படுகிறது.
ஹமாஸூக்கு தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து காஸாவைக் கைப்பற்ற முயற்சிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு ஆகும்.
இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொள்வதும் தாக்குதல் நடத்திக் கொள்வதும் தொடர்கதையாக இருக்கிறது.