இந்த ஆண்டு இது நடக்கும்; உலக சுகாதார அமைப்பின் தலைவர் நம்பிக்கை!
உலக நாடுகள் விரிவான நடவடிக்கை எடுத்தால் கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம் என உலக சுகாதார அமைப்பு தலைவர் (Dr Tedros Adhanom Ghebreyesus) நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டது.
அதன்பின்னர் உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று பரவிய நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனாவின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. டெல்டா, ஆல்பா, பீட்டா, காமா என்று உருமாறிய கொரோனா, ஒமைக்ரான் வைரசாகவும் உருமாறி உள்ளது.
டெல்டாவை விட வேகமாக பரவக்கூடியது என்பதால், ஒமைக்ரான் தொற்றால் உலகம் முழுவதும் மூன்றாவது அலை வீசி வருகிறது. இந்நிலையில் , ஏப்ரல் மாதத்துக்குள் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதுபோல், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசியசும் (Dr Tedros Adhanom Ghebreyesus), இந்த ஆண்டுடன் கொரோனா முடிவுக்கு வந்து விடும் என்று கூறியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் செயற்குழுவின் 150-வது அமர்வு நேற்று நடைபெற்றது அதில், டெட்ராஸ் அதனம் கெப்ரிசியஸ் (Dr Tedros Adhanom Ghebreyesus) பேசுகையில்,
"கொரோனாவை ஒழித்து கட்டுவதில் பிராந்திய, தேசிய, சர்வதேச ரீதியாக உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நாடுகளுக்கு தேவையான ஆதாரங்கள், வியூகங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவி அளித்து வருகிறது.
நாடுகள் இந்த வியூகங்களை பயன்படுத்தி, விரிவான நடவடிக்கை எடுத்தால், நாம் இந்த ஆண்டிலேயே கொரோனாவுக்கு முடிவு கட்டலாம்.
கொரோனாவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இதுபோன்ற நெருக்கடிகளை தடுக்க புதிய தீர்வுகளை உருவாக்க வேண்டும். தொற்று முடியும்வரை காத்திருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.