கனடாவில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் முன்கூட்டியே ஓய்வுபெற விண்ணப்பம்!
2029 ஆம் ஆண்டிற்குள் பொதுச் சேவையின் அளவைக் குறைக்கும் நோக்கில் கனடிய மத்திய அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான மத்திய அரச ஊழியர்கள் முன்கூட்டியே ஓய்வுபெறும் திட்டத்திற்கு (early retirement package) விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம், சுமார் 68,000 மத்திய அரச ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வுபெறத் தகுதியுடையவர்கள் என அறிவித்தல் விடுக்கப்பட்டது.
மார்ச் 27 ஆம் திகதி விண்ணப்ப செயல்முறை தொடங்கியதில் இருந்து, சுமார் 4,600 அரச ஊழியர்கள் முன்கூட்டியே ஓய்வுபெறும் ஊக்கத் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக, திறைசேரி சபைத் தலைவர் ஷஃப்காட் அலியின் ஊடகப் பணிப்பாளர் மொஹமட் கமல் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள் ஜூலை 24 ஆம் திகதி வரை முன்கூட்டியே ஓய்வுபெறும் (ERI) திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் ஊழியர்களுக்கு நிதித் அபராதங்கள் இன்றி ஓய்வுபெற அனுமதிக்கும் என்பதுடன் முன்கூட்டியே ஓய்வுபெறும் ஊக்கத் திட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அரச ஊழியரும் ஜனவரி 20, 2027 க்குள் ஓய்வுபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய ஊழியர்கள் பல ஆண்டுகால சேவையின் அடிப்படையில் உடனடி ஓய்வூதியத்துடன் ஓய்வுபெற விண்ணப்பிக்கலாம், முன்கூட்டியே ஓய்வுபெறுவதற்கு எந்தக் குறைப்பும் இல்லை என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.