பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ; ஈரான் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக ஈரான் முக்கிய தீர்மானம் எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
'மெக்கா பாதுகாப்பு கூட்டணி' (Mecca Defence Alliance) அமைப்பைச் சேர்ந்த உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள், பிராந்திய பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக தெஹ்ரானுக்கு வருகை தரவுள்ளதாக ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளர் அலி பாகேரி தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபிய பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் மற்றும் துருக்கிய உளவுத்துறை தலைவர் இப்ராஹிம் கலின் ஆகியோர், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயியுடன் தெஹ்ரானில் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார். உள்நாட்டுத் திறன்களை அடிப்படையாகக் கொண்ட ஈரானின் தற்காப்பு மாதிரி, தேசிய பாதுகாப்பை உருவாக்குவதற்கான ஒரு வெற்றிகரமான மாதிரியாக மாறியுள்ளது என்றும் தெரிவித்தார்.
பிராந்திய நாடுகளின் மூலமாகவே பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆட்சிகளின் தலைமையிலான வெளிநாட்டு தலையீடுகள் மற்றும் செல்வாக்கை எதிர்கொள்வதுமே ஈரானின் மூலோபாயக் கொள்கையாகும் என்றும் தெரிவித்தார். இந்தக் கூட்டம் எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரங்களை இன்னும் வெளியிடவில்லை.
இருப்பினும், இது குறித்து அறிந்த இரு நபர்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், இந்தக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. யேமனில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களால் சவூதி அரேபியா மீது தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், ஈரானுக்கும் இந்த மூன்று நாடுகளைக் கொண்ட குழுவிற்கும் இடையே நடைபெறும் முதல் உயர்மட்டத் தொடர்பு இதுவாகும்