சீனாவை மிரட்டும் ‘கஜிகி’ புயல் ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான சான்யா அருகே உருவாகியுள்ள ‘கஜிகி’ புயல், தீவிர வெப்பமண்டல புயலாக மாற்றமடைந்து, வடமேற்கு திசையில் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று சீன வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இது சான்யா நகரின் தென்கிழக்கே சுமார் 200 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், புயல் மேலதிகமாக தீவிரமடைந்து காற்றின் வேகம் மணிக்கு 48 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘கஜிகி’ புயல் எச்சரிக்கை காரணமாக சீனாவின் சுற்றுலா நகரமான சான்யாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டு, பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
சுமார் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த புயல் வியட்நாமை நோக்கி நகர்வதற்கு முன்பாக சீனாவின் தெற்கு தீவு மாகாணமான ஹைனானின் தெற்கு கடற்கரையில் கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.