கனடாவில் வாகனச் சோதனையில் 5 இலட்சம் டொலர் பெறுமதியான போதைப்பொருட்கள், துப்பாக்கிகள் பறிமுதல்: மூவர் கைது
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள சாட்ஸ்வொர்த் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாகனச் சோதனையின் போது, 5 இலட்சம் டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியுடைய பெருந்தொகை போதைப்பொருட்களும் நான்கு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெற்கு புரூஸ் ஒன்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சந்தேகநபர்கள் மற்றும் தெருவோர குற்றச்செயல்கள் தொடர்பான தீவிர விசாரணைகளின் ஒரு பகுதியாகவே, செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலை 10 இல் இந்த வீதிச் சோதனை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்டது.
இச்சோதனையின் போது ஃபென்டானில் மற்றும் கொகேயின் என சந்தேகிக்கப்படும் பெருந்தொகை போதைப்பொருட்கள், குறிப்பிட்டளவு பணத்தொகை மற்றும் நான்கு துப்பாக்கிகள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 500,000 டொலர்களுக்கும் அதிகம் என்றும், துப்பாக்கிகளின் பெறுமதி 25,000 டொலர்களுக்கும் அதிகம் என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் டர்ஹாம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர், கிறிஸ்டியன் ஐலண்ட் ஃபர்ஸ்ட் நேஷன் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் மற்றும் ஓவன் சவுண்ட் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஆகியோர் அடங்குவர்.
அனுமதியின்றி தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை கைவசம் வைத்திருந்தமை, குற்றச்செயல்கள் மூலம் பெறப்பட்ட 5,000 டொலர்களுக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருந்தமை, தயாரிப்பு இலக்கங்கள் மாற்றப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருந்தமை மற்றும் கொகேயின், ஓபியாயிட் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தல் நோக்கில் கைவசம் வைத்திருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் ஏதேனும் தெரிந்த பொதுமக்கள் 1-888-310-1122 அல்லது (519) 482-1677 ஆகிய தொலைபேசி எண்களின் ஊடாக தெற்கு புரூஸ் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.