டிக் டொக் செயலி விற்பனையா? தாய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
டிக் டொக் செயலியை விற்பனை செய்வதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை என அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance) தெரிவித்துள்ளது.
பயனர்களின் விபரங்களை சீன அரசுக்கு வழங்கக்கூடிய அச்சம் காரணமாக டிக் டொக் செயலிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இவ்வாறான நிலையில், அதன் தாய் நிறுவனம் டிக் டொக் செயலியை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இருப்பினும், அந்த தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், அதனை விற்பனை செய்வதற்கு எந்த திட்டமும் இல்லை எனவும் டிக் டொக்கின் தாய் நிறுவனமான (ByteDance) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் டிக் டொக் செயலியை தடை செய்வதற்கு இந்த வாரம் செனட் சபை அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், அதனை விற்பனை செய்வதற்கு அல்லது தடை செய்வதற்கு அங்கு 9 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் டிக் டொக் செயலிக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.