முதல் முறையாக ஊரடங்கை அமல்படுத்தும் வெளிநாடு ஒன்று!
தென்பசிபிக் கடலில் அமைந்திருக்கும் சிறிய தீவு நாடான தீவு நாடான டோங்காவில் 5 பேருக்கு Covid19 தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு முதல் முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் வுஹான் மாகாணத்தில் முதல் முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கினாலும், இன்று வரை ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத ஒரு சில நாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
அந்த வகையில் தென்பசிபிக் கடலில் அமைந்திருக்கும் எரிமலை சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான தீவு நாடான டோங்கா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிய சொற்ப நாடுகளில் ஒன்றாக இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (01-02-2022) செவ்வாய்கிழமை டோங்காவில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தலைநகர் நுகு அலோபாவில் உள்ள துறைமுகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 2 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர்.
இதைத்தொடர்ந்து ஊழியர்களின் குடும்பத்தினர் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அந்த நாட்டில் முதல் முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று புதன்கிழமை (02-02-2022) மாலை 6 மணிக்கு ஊரடங்கு அமலுக்கு வரும் எனவும், ஒவ்வொரு 48 மணி நேரத்துக்கு பிறகும் நிலைமை மதிப்பாய்வு செய்யப்படும் எனவும் அந்த நாட்டின் பிரதமர் சியோசி சொவலேனி (Siaosi Sovaleni) கூறினார்.