கனடா தமிழ் அரசியல்வாதி பார்த்தி கந்தவேல் மீது கையூட்டல் புகார்
டொராண்டோ மாநகர சபை உறுப்பினரான பார்த்தி கந்தவேல், தனது ஸ்கார்பாரோ தென்மேற்கு தொகுதியில் உள்ள இரு கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதி பெற்றுத் தர, கட்டுமான நிறுவனங்களிடம் பெரும் தொகையை லஞ்சமாகக் கேட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஒன்றாரியோ மாகாண காவல்துறை தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, கென்னடி சாலையில் அமையவிருந்த பிரம்மாண்டமான இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாநகர அதிகாரிகள் ஆரம்பத்தில் அனுமதி மறுத்தனர்.

ஆனால், 2025 ஜூன் மாதம் பார்த்தி கந்தவேல் கொண்டு வந்த தீர்மானத்தின் மூலம் அந்தத் திட்டத்திற்குச் சாதகமான நகர்வு ஏற்பட்டது. இந்தச் சூழலில், அவர் 'சமூக நலக் கட்டணம்' என்ற பெயரில் இல்லாமல், சட்டவிரோதமாகப் பணம் கேட்டதாகக் கட்டுமான நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
முன்னாள் ஆசிரியரும், பள்ளி அறங்காவலருமான பார்த்தி கந்தவேல், 2023-ல் மாநகர சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தன் மீதான இந்த விசாரணைக் குறித்துக் கேட்டு அதிர்ச்சியடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், "இந்தச் சிக்கலை விரைவில் சரி செய்ய விரும்புவதாகவும், மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைத் தக்கவைப்பேன்" என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.