ரொறன்ரோ விமான நிலையத்தில் 17 நாட்களாக தனது பெட்டியை தேடும் நபர்
ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் உரிமை கோரப்படாத பயணப் பெட்டிகள் குவிந்து வரும் நிலையில், உள்ளூர்வாசி ஒருவர் ரொறன்ரோவுக்கு வந்து 17 நாட்களாக தனது பைகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்.
குறித்த நபர், ஜூன் 17 அன்று கால்கரியிலிருந்து நேரடி விமானத்தில் ரொறன்ரோவுக்கு வந்துள்ளார். ஆனால், சுமார் 3 மணி நேரம் தமது பெட்டிகளுக்காக விமான நிலையத்தில் அவர் காத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, ஒருமணி நேரத்திற்கும் மேலாக வாடிக்கையாளர் சேவை மையத்தில் உதவி கோரி காத்திருந்தும் பலனேதும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இரண்டு வாரத்திற்கும் மேலாகியும் தமது பெட்டி தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என்றே அவர் தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் உரிமை கோரப்படாத சுமார் 2,000 பெட்டிகளில் இருந்து தமது பெட்டியை தேடும் பணி அவ்வளவு எளிதல்ல என குறிப்பிட்டுள்ள அவர், இருப்பினும் ஏமாற்றமே மிஞ்சியாதாக குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் மிகப்பெரிய விமான நிலையத்தில் தங்களுடைய பெட்டிகளை தீவிரமாக தேடி வரும் பல ஆயிரம் பயணிகளில் இவரும் ஒருவர். ஆனால் பல ஆயிரம் பயணப் பெட்டிகள் தற்போதும் உரிமை கோரப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது.
கடந்த மாதத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்ட விமானங்களில் 7.7 சதவீதம் பல்வேறு காரணங்களால் ரத்தாகியுள்ளது.
மட்டுமின்றி, ஜூன் மாதத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்ட 49.5% விமானங்கள் தாமதமாகியுள்ளதாகவும் வெளியான தரவுகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.