டொராண்டோவில் கத்திக்குத்து தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை தேடும் பொலிஸார்
கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதியில் போக்குவரத்து ஊழியர் ஒருவர் மீது எவ்வித காரணமுமின்றி நடத்தப்பட்ட கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேகநபரை டொராண்டோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் புளோர் மற்றும் யோங் வீதிகளுக்கு அருகே குறித்த ஊழியர் நடைபாதையில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்தின் போது அந்த ஊழியர் தனது இடைவேளையில் இருந்ததாக ரீ.ரீ.சீ நிர்வாகம் தெரிவித்துள்ளது. கத்திக்குத்துத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஊழியர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டில் நலமடைந்து வருவதாக ரீ.ரீ.சீ தெரிவித்துள்ளது. சந்தேகநபர் 36 வயதான அந்தோணி கிறிஸ்டோபர் டேவிட் மெக்லாலின் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியமை மற்றும் படுகாயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் தேடப்பட்டு வருகிறார்.
5 அடி 8 அங்குலம் முதல் 5 அடி 10 அங்குலம் வரை உயரம் கொண்ட நடுத்தர உடல்வாகு உடையவர். முகம் மற்றும் கைகளில் பல பச்சைக் குத்தல்கள் மற்றும் முழுமையான தாடி வைத்துள்ளார் என குறித்த நபர் பற்றிய அடையாள விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சாம்பல் நிற டி-சர்ட், நீல நிற வெஸ்ட் ஜோக்கெட், சாம்பல் நிறப் பேன்ட், பழுப்பு நிற லெதர் காலணிகள் மற்றும் பின்புறமாகத் திருப்பி வைக்கப்பட்டக் கருப்பு நிற தொப்பி (வெள்ளை எழுத்துகளில் "We The North" என எழுதப்பட்டது).
இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் 416-808-5300 என்ற எண்ணில் பொலிஸாரையோ அல்லது 416-222-TIPS (8477) என்ற எண்ணில் குற்றத் தடுப்புப் பிரிவையோ (Crime Stoppers) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.