கனடவில் போலி நோட்டுகளைக் கொடுத்து மோசடி
டொராண்டோவைச் சேர்ந்த லீசா பாலியகோவா என்பவர், தனது ஸ்மார்ட்போனை ஃபேஸ்புக் மார்க்கெட்பிளேஸ் (Facebook Marketplace) மூலம் விற்பனை செய்ய முயன்றபோது போலி நோட்டுகளால் ஏமாற்றப்பட்டுள்ளார்.
நார்த் யார்க் பகுதியில் வசிக்கும் லீசா, தனது விளம்பரத்தைப் பார்த்து வந்த வாடிக்கையாளர் ஒருவருடன் 900 டாலருக்கு விலையை உறுதி செய்தார்.
கடந்த ஏப்ரல் 5-ஆம் திகதி, தனது குடியிருப்பு கட்டிடத்தின் வரவேற்பு அறைக்கு வந்த அந்த நபரிடம் போனை ஒப்படைத்த லீசா, அவரிடமிருந்து எட்டு 100 டாலர் தாள்களையும், இரண்டு 50 டாலர் தாள்களையும் ரொக்கமாகப் பெற்றுக் கொண்டார்.

ஆனால், அந்தப் பணத்தை வங்கியின் ஏடிஎம் (ATM) இயந்திரத்தில் டெபாசிட் செய்ய முயன்றபோது, இயந்திரம் அந்தத் தாள்களை அடையாளம் காண முடியாமல் நிராகரித்தது.
பின்னர் வங்கி அதிகாரியிடம் சென்று சரிபார்த்தபோது, அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது உறுதியானது. அந்தத் தாள்களின் நிறம் மாறியிருந்ததும், பாதுகாப்பு இழைகள் பிரிந்து வந்ததும், அனைத்து 100 டாலர் தாள்களிலும் ஒரே வரிசை எண் (Serial Number) இருந்ததும் கண்டறியப்பட்டது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டொராண்டோ பகுதியில் தற்போது 50 மற்றும் 100 டாலர் போலி நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், 2025-ஆம் ஆண்டில் 94,000 டாலர் மதிப்பிலான போலி நோட்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அதன் மதிப்பு 133,000 டாலரைத் தாண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.