கனடாவில் திரும்பப்பெறப்படும் டொயோட்டா வாகனங்கள்
கனடாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயிரக் கணக்கான டொயோட்டா ரக வாகனங்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் மொத்தம் 32,733 வாகனங்களை திரும்பப் பெறுவதாக கனடிய போக்குவரத்து திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பின்புறக் கேமரா (rearview camera) செயலிழக்கவோ அல்லது சரியாக படம் காட்டாமலோ இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“பின்புறக் கேமரா சரியாக இயங்கவில்லை என்றால், வாகனம் பின்நோக்கிச் செல்லும்போது டிரைவர் பின்னால் காணும் திறன் குறையக்கூடும். இது விபத்துக்கான ஆபத்தை அதிகரிக்கலாம்,” என்று அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாடல்கள் இந்த திரும்பப் பெறல் நடவடிக்கை 14 அங்குல மல்டிமீடியா டிஸ்ப்ளே பொருத்தப்பட்ட சில மாடல்களை உள்ளடக்கியது:
டொயோட்டா சீக்வோயா – 2023, 2024, 2025
டொயோட்டா டன்ட்ரா – 2022, 2023, 2024, 2025
டொயோட்டா நிறுவனம் உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிப்பை அனுப்பி, வாகனங்களை அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்துக்குக் கொண்டு சென்று டிஸ்ப்ளே மென்பொருளை (software) புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயனர்கள் தங்கள் வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய 1-888-869-6828 என்ற எண்ணில் அழைக்கவோ அல்லது Toyota நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கவோ முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.