அமெரிக்கா-சீனா வர்த்தக போர் உச்சம் ; 100 சதவீத வரி அறிவித்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீத வரி விதிப்பதாகவும், 'முக்கியமான மென்பொருளுக்கு' ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
அதன்படி, இந்த புதிய வரிகள் மற்றும் கட்டுப்பாடுகள் நவம்பர் முதலாம் திகதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதியில் சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
எஃகு மற்றும் அலுமினியத்திற்கு 50 சதவீதம் முதல் நுகர்வோர் பொருட்களுக்கு 7.5 சதவீதம் வரையிலான குறிப்பிட்ட வரி அளவுகளுடன் சீனாவிலிருந்து ஏறக்குறைய அனைத்து இறக்குமதிகளும் ஏற்கனவே அதிக வரிகளுக்கு உட்பட்டுள்ளன.
புதிய 100 சதவீத கூடுதல் வரியினால், ஒட்டுமொத்த கட்டண அளவுகள் மிக அதிகமாக இருக்கும் என்றும், இது உலகளாவிய வர்த்தகத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.