வெளிநாட்டு வேலை மோகத்தால் இந்தியருக்கு நேர்ந்த சோகம்!
அமெரிக்க வேலை மோகத்தால் ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்த மோசடி செய்தவர்களிடம் ரூ 26 லட்சத்தை இழந்ததோடு வெளிநாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட இருவர் முக்தியார் சிங் எனும் முகா மற்றும் மேக்கி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முகாவும் அவரது மகன் மேக்கியும் குருக்ஷேத்திரத்தில் உள்ள சைனா கலான் கிராமத்தில் வசிப்பவர்கள்.
இவர்களின் ஏமாற்று செயலால் பாதிக்கப்பட்டவர் தில்பாக் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் எனக் கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் தில்பாக் சிங்கை அமெரிக்காவிற்கு அனுப்பி வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்திருந்தனர்.
கடந்த 2019 ஜனவரியில், அந்த நபர் தனது பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கினார் மற்றும் ரூ 35 லட்சம் மதிப்புள்ள ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. மார்ச் 10, 2019 அன்று, தில்பாக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ரூ 10 லட்சம் கொடுத்தார். அவர்கள் அவரை மருத்துவ பரிசோதனைக்காக டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் அந்த நபரை இரண்டு நாட்கள் ஒரு ஹோட்டலில் வைத்து பின்னர் தாய்லாந்திற்கு அனுப்பிய நிலையில் பின்னர் தில்பாக் அங்கிருந்து டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மே 1, 2019 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர் அந்த நபரை மாஸ்கோவிற்கும், பின்னர் பாரிஸ் மற்றும் மெக்சிகோவிற்கும் அனுப்பினார்.
மெக்ஸிகோவில், தில்பாக் அங்குள்ள பொலிசாரால் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நபர் சிறையில் இருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களிடமிருந்து ரூ 15 லட்சம் பணத்தை பெற்றுள்ளனர்.
இதற்கிடையே சிறையில் இருந்து தில்பாக் ஒரு ஹோட்டலுக்கு அனுப்பப்பட்டார் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் அவரை அமெரிக்காவிற்கு அனுப்ப அவரது குடும்பத்தினரிடமிருந்து ரூ 10 லட்சம் வேண்டும் கோரிய நிலையில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் ஜூன் 2019 இல் பணத்தை செலுத்தினர்.
பணம் செலுத்திய பின்னர், பாதிக்கப்பட்டவர் எல்லையைத் தாண்டி அமெரிக்காவிற்குள் நுழைந்த போது அமெரிக்க பொலிசிடம் அகப்பட்ட நிலையில் அங்கு 8 மாதங்கள் சிறைக்கு அனுப்பப்பட்டு ஒருவழியாக பிப்ரவரியில் அவர் மீண்டும் இந்தியா சென்றுள்ளார்.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பவர்களிடம் இருந்து பணத்தை மீட்க முயற்சித்து முடியாமல் போனதால், தற்போது வேறுவழியின்றி பொலிஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டதன் மூலம் இந்த வழக்கு தற்போது வெளியில் தெரிய வந்துள்ளது.