ஜப்பானில் கடும் பனிப்பொழிவு: நூற்றுக்கணக்கான ரயில் மற்றும் விமான சேவை ரத்து!
மிகவும் மோசமான வானிலை காரணமாக ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் 683 ரயில்கள் மற்றும் 136 விமானங்கள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
நியூ சிட்டோஸ் விமான நிலையத்திற்கு வரும் மற்றும் புறப்படும் விமானங்களும், உள்ளூர் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜப்பானில் ஹொக்கைடோ மாகாணத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த காற்று மற்றும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. திங்கட்கிழமை காலை ஹொக்கைடோவில் வினாடிக்கு 138 அடி வேகத்தில் காற்று வீசியது.
மூன்று மணி நேரத்தில் 9 அங்குலங்கள் வரை பனி விழுந்தது, மேலும் தீவின் தலைநகரான சப்போரோ நகரம் உள்பட பல பகுதிகளில் பனியின் ஆழம் 38 அங்குலமாக இருந்தது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில், ஜப்பானின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பனிப்பொழிவு காணப்படலாம் என்றும், பனியின் ஆழம் 19-27 அங்குலங்கள் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஹொக்கைடோ மாகாணத்தில் 683 ரயில்கள் மற்றும் 136 விமானங்கள் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.