கனடிய பிரதமர் குடும்பத்துடன் விடுமுறைக்காக பிரிட்டிஷ் கொலம்பியா பயணம்
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் விடுமுறையை கழிப்பதற்காக பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பயணம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அவர் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பயணிப்பதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையில் அவர் அங்கு தங்கியிருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் எந்த இடத்தில் அவர் தங்கியிருப்பார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் குடும்பம் தங்கியிருக்கும் இடம் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அரசாங்க விமானத்தை பயன்படுத்தி பிரதமர் இந்த பயணத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட பயணங்கள் மேற்கொண்டாலும் பிரதமர் பதவி நிலையில் இருப்பவர் அரசாங்க விமானத்தை பயன்படுத்த வேண்டியது அவசியமானது.
இதனால் பிரதமர் பயண கட்டணங்களை அரசாங்கத்திற்கு செலுத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்குவதற்காக செலவாகும் தொகையையும் அவர் மீள செலுத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே பிரதமர் ட்ரூடோ குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க சென்ற இடங்கள் மற்றும் விமானப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட தொகை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் பிரதமர் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு குடும்பத்துடன் விடுமுறையை கழிப்பதற்காக செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.