இந்திய தூதரக அதிகாரிகளை கனடா வேவு பார்த்ததா?: எழுந்துள்ள கேள்விகள்
கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் வெளிப்படையாக குற்றம் சாட்டியதால் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கனடா பிரதமரின் குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய தரப்பில் சில கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தியாவுக்கு தொடர்பு
கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியின் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், தங்கள் குற்றச்சாட்டுக்கு தங்களிடம் ஆதாரம் இருப்பதாகவும் கனடா தரப்பு தெரிவித்துள்ளது.
அந்த ஆதாரங்கள் SIGINT (signal intelligence), அதாவது சிக்னல்கள் வடிவிலான ஆதாரங்கள் என கனேடிய அதிகாரிகள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விடயம், இந்திய தரப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சிக்னல்கள் வடிவிலான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கனடா கூறியுள்ளதால், அவை என்ன சிக்னல்கள்? அப்படியானால், இந்திய தூதரக அதிகாரிகள் ரகசியமாக உளவு பார்க்கப்பட்டார்களா?
அரசியல் நோக்கம் கொண்ட செயல்
இந்திய தூதரக அதிகாரிகளின் மொபைல் போன்கள் சட்ட விரோதமாக ஒட்டுக் கேட்கப்பட்டனவா? அப்படி மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்குமானால், அது வியன்னா ஒப்பந்தத்தை மீறும் செயல் என்கிறார்கள் உளவுத்துறையைச் சார்ந்தவர்கள்.
இன்னொரு பக்கம், இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்ட செயல் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். இரு நாடுகளுக்கிடையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டால், அது எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும்,
மூடிய கதவுகளுக்குப் பின் தலைவர்கள் சந்தித்து அது குறித்து பேசியிருக்கவேண்டுமே தவிர, இப்படி ஒரு நாட்டின் பிரதமர் வெளிப்படையாக ஒரு நட்பு நாட்டின் மீது குற்றம் சாட்டியிருக்கக்கூடாது என்கிறார்கள் அவர்கள்.