ட்ரம்ப் 48 மணித்தியால காலக்கெடு; ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை கடும் எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த 48 மணித்தியால காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் மத்திய கிழக்குப் பகுதிகளில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குவோம் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை கடும் எச்சரிக்கை
இன்று திங்கட்கிழமை (23) காலை ஈரானிய அரச தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் உத்தியோகபூர்வ அறிக்கையில் இக்கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்பட்டால், ஆக்கிரமிப்பு ஆட்சியின் மின் நிலையங்களையும், அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் பிராந்திய நாடுகளின் மின் நிலையங்களையும், மேலும் அமெரிக்கர்களுக்கு பங்குள்ள பொருளாதார, தொழில்துறை மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகளையும் குறிவைத்து ஈரான் பதிலடி கொடுக்கும்,” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இஸ்ரேல் ஒரு “ஆக்கிரமிப்பு ஆட்சி” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. “நாங்கள் இதைச் செய்வோம் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம்,” எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டிருந்த ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் 48 மணிநேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையைத் தடையின்றித் திறக்காவிட்டால், அந்நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்திலிருந்து ஆரம்பித்து அனைத்து மின் கட்டமைப்புக்களும் தரைமட்டமாக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.